ரவுடி நாகேந்திரன் சடலம் முன்பு 2ஆவது மகன் திருமணம்!
நாகேந்திரன் உடல் முன்பு அவரது இளையமகன் திருமணம் நடைபெற்றது.
நாகேந்திரன் உயிரிழப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் மற்றும் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அவரது மரணத்தைத் தொடர்ந்து புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகேந்திரனின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி கோரி, அவரது உறவினர்கள் தங்கள் தரப்பில் ஒரு டாக்டரை அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இதை நீதிபதி சதீஷ்குமார் நிராகரித்தார். அவரது உத்தரவு பேரில், மாதவரம் மாஜிஸ்திரேட் நீதிபதி தீபா மேற்பார்வையில், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் தடயவியல் துறை தலைவர் டாக்டர் பிரியதர்ஷினி தலைமையில் டாக்டர்கள் சாந்தகுமார், நாராயணன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.
மகன் திருமணம்
பின்னர், நாகேந்திரனின் உடல் அவரது மூத்த மகன் அஸ்வத்தாமனிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் வியாசர்பாடி, சத்யமூர்த்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் கூடினர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடாக, போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நாகேந்திரனின் உடல் முன்பாகவே அவரது இளைய மகன் அஜித்துக்கும், நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.