கோவில் அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்

trichy Murder
By Karthikraja Jan 28, 2025 08:03 AM GMT
Report

 ரவுடி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

அன்புராஜ்

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்புராஜ்(32). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

srirangam anburaj

இந்நிலையில் இன்று(28.01.2025) காலை உடற்பயிற்சி மையத்துக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் அருகே சென்றுக்கொண்டிருந்தார்.

 வெட்டிக்கொலை

அப்போது 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தது. அதிர்ச்சியடைந்த அன்புராஜ் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அந்த கும்பல் அவரை ஒட ஒட விரட்டி, தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலே ரத்த வெள்ளத்தில் மிதந்தார். 

srirangam rowdy anburaj

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் அவரது உடல் பிரேதபரிசோதனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சாலை மறியல்

இது குறித்த தகவலறிந்த அவரது உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் உறுதியாக கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதி திருவிழாவின் போது வேடுபறி நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நகரின் முக்கிய பகுதியில் நடந்த கொலை சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.