பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடி குருவி விஜய் - சுட்டுப்பிடித்த போலீசார்
மதுரையில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் செண்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டிடம் அருகே ரவுடி குருவி விஜய் பெண்ணொருவரை வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரை கண்டதும் குருவி விஜய் மற்றும் அவனது கூட்டாளிகள் அவர்களை தாக்க முயன்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக குருவி விஜய் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடிக்கு காலில் காயம் ஏற்பட்டது. ரவுடியையும் அவனது கூட்டாளிகளையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். காலில் காயம் பட்ட குருவி விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரவுடி விஜய் மீது கொலை, கொள்ளை, உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.