சென்னையில் பொதுமக்களை விரட்டி விரட்டி வெட்டிய ரவுடிகள் - அலறியடித்து ஓடிய மக்கள்
சென்னையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 25க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி வெட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரவுடி கும்பல் அட்டகாசம்
சென்னை ஆலத்துார் ஆபிரகாம் தெருவில் நேற்று இரவ 25-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று போதையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டது.
அத்துடன் சாலையில் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியது. இதை பார்த்த பெண்கள், சிறுவர்கள அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் அந்த கும்பல் நவீன் என்பவரை சரமாரியாக வெட்டியதுடன் அங்கிருந்த சாமியாரின் சமாதி மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளது.
பின்னர் இச்சம்பவம் பற்றி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர்.இதையடுத்து அங்கு வந்த போலீசாரை பார்த்ததும் ரவுடி கும்பல் தப்பி ஓடியது. அவர்களை பிடிக்க முயன்ற போலீசார் மீதும் ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டை வீசியது.இதனால் அப்பகுதியே கலவரப்பகுதி போல் மாறியது.
இச்சம்பவம் பற்றி அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கலவரம் நடந்த பகுதியை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
19 பேர் அதிரடி கைது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவருமான நாகூர் மீரான் (32) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் ராபின்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் என 5 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நாகூர் மீரானின் கூட்டாளி வீரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராபின்சனின் தங்கை ஜெரினா மற்றும் அவரது காதலன் அனில் ஆகியோரை கடத்திச் சென்று அடித்து உதைத்து மிரட்டியது. பின்னர் இருவரையும் வேளச்சேரியில் இறங்கிவிட்டு சென்றது தெரியவந்தது.
அங்கிருந்து தப்பி வந்த ஜெரினா, அனில் ஆகியோர் நாகூர் மீரான் கூட்டாளிகள் தங்களைக் கடத்தி விட்டதாக ராபின்சனின் கூட்டாளி சஞ்சயிடம் கூறினர்.
இதனால் ,சஞ்சய் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு கத்தி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களோடு ஆபிரகாம் தெருவுக்குள் நுழைந்து கண்ணில் பட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கிருந்த பொதுமக்கள் சிலரை வெட்டியது தெரியவந்தது.
இந்த வன்முறையில் சம்பவத்தில் அபுபக்கர் , சஜின், நவீன் ஆகிய மூன்று பேர் படுகாயம் அடைந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் 3 ஆட்டோக்கள், 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து கலவரத்தில் ஈடுபட்ட ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சஞ்சய், அனில் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 19 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அம்பேத்கர் நகர் மற்றும் ஆபிரஹாம் தெரு பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.