தாய்க்கு செய்த சத்தியத்தை காப்பாற்றும் கிரிக்கெட்டின் “ராக்கி பாய்” - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் வீரர் போவெல் தாய்க்கு செய்த சத்தியத்தை காப்பாற்றி வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடி வரும் போவெல் கடைசியாக நடந்த கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.
28 வயதான போவெல் முதல் முறையாக 2016 ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடினார். என்னதான் அவர் அதிரடியாக விளையாட கூடிய வீரராக இருந்தாலும், தொடர்ந்து ரன் குவிக்க முடியாத காரணத்தால் உள்ளே, வெளியே என்று அணியில் சென்று கொண்டிருந்தார். இந்த சமயத்தில் 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டாலும் போவெல்க்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு தரப்படவில்லை.
ஆனால் போவெலின் கிரிக்கெட் வாழ்க்கை கடந்த 2 ஆண்டுகளாக தான் உச்சம் தொட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் போவெல் சதம் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதேபோல் பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியிலும் போவெல் அசத்தினார்
. இதன் மூலம் ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் 2 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.தற்போது டெல்லி அணிக்காக ஃபினிஷிங் ரோலில் போவெல் கலக்கி வருகிறார். இந்நிலையில் போவெல் குறித்து பேசிய கிரிக்கெட் வர்ணனையாளர் இயன் பிஷப், போவெல் இளம் வயது வாழ்க்கை வறுமையால் பாதிக்கப்பட்டது.
அந்த சமயத்தில் அவர் பள்ளி பருவத்தில் இருந்த போது தனது தாய்க்கு ஒரு சத்தியம் செய்தார். தமது குடும்பத்தை வறுமையிலிருந்து மீட்பேன் என்று கூறி இருந்தார். அதற்கு அவர் தேர்ந்து எடுத்த பாதை கிரிக்கெட். தற்போது ஐபிஎல் தொடர் மூலம் தனது சத்தியத்தை போவெல் நிறைவேற்றி வருகிறார் எனவும் இயன் பிஷப் கூறியுள்ளார்.