நியூசிலாந்து அணியின் பிரபல வீரர் ஓய்வு அறிவிப்பு - உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் ராஸ் ரெய்லர் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டரில் தூண் போன்று நிலைத்து நின்று வெற்றிகளை குவித்தவர் ராஸ் டெய்லர். இவர் சதமடித்த பிறகு நாக்கை வெளியே நீட்டி கொடுக்கும் போஸுக்கு பல ரசிகர்கள் உண்டு.
2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரை இருப்பேன் எனக்கூறியிருந்த அவர் திடீரென தற்போதே ஓய்வை அறிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் அறிமுகமான ராஸ் டெய்லர் இதுவரை 110 டெஸ்ட் போட்டிகள், 233 ஒருநாள் போட்டிகள், 102 டி20 போட்டிகள் என நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் அதிக ரன் எடுத்த வீரரும், சர்வதேச அளவில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் தலா 100 போட்டிகளில் களம் கண்ட முதல் வீரரும் ராஸ் டெய்லர்தான். இந்தாண்டு நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் போது வில்லியம்சனுடன் கூட்டணி அமைத்து இந்தியாவுக்கு தலைவலியாக இருந்த இவர் இன்னும் 2 முதல் 3 ஆண்டுகள் விளையாடி இருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நியூசிலாந்து அணியுடனான பயணம் மிகச்சிறப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் தேசத்திற்காக விளையாடியதை நினைத்து பெருமைக் கொள்கிறேன். ஆனால் ஒவ்வொரு நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்தவகையில் எனது கிரிக்கெட்டிற்கும் முடிவு வந்துவிட்டதாக கருதுகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி அடுத்ததாக வங்கதேச அணியுடன் 2 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளுடன் ராஸ் டெய்லர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார். இதே போல ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் இருக்கும் 6 ஒருநாள் போட்டிகளை முடித்தவுடன் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து விடை பெறவுள்ளார்.