ரோகித் சர்மா, விராட் கோலி பற்றி தவறாக பேசிய இளைஞன் கொடூரக் கொலை - தமிழகத்தில் அதிர்ச்சி சம்பவம்...!
அரியலூரில் இந்திய கிரிகெட் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து தவறாக பேசிய தன் நண்பனை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்திய நண்பர்கள்
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் நேற்று முன் தினம் இரவு நண்பனுடன் வெளியே சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் விக்னேஷை தேடி அலைந்தனர். அப்போது, ஊருக்கு வெளியில் விக்னேஷ் தலையில் ரத்தக்காயத்துடன் சடலமாக கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விக்னேஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொடூரமாக கொலை செய்த நண்பன்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, விக்னேஷ் நண்பன் தர்மராஜை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், விக்னேஷை கொலை செய்ததை தர்மராஜ் ஒப்புக்கொண்டார்.
மேலும், அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தர்மராஜ் வாக்குமூலம் அளித்தார்.
அந்த வாக்குமூலத்தில் -
நான், பிரபாகரன், விக்னேஷ் மூன்று பேரும் மது அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, மது அருந்துவிட்டு வீடு திரும்பியபோது, நான் மீண்டும் விக்னேஷை அழைத்துக்கொண்டு மது அருந்தச் சென்றேன். நான் கொஞ்சம் திக்கித் திக்கி பேசுவேன்.
மதுபோதையில் இருந்த விக்னேஷ், "உன்னைப் போலத்தான் உன் ஆட்களும் இருக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை திட்டிக்கொண்டு வந்தான். இதனால், எனக்கும், விக்னேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நான், விக்னேஷை ஆத்திரத்தில் கொடூரமாக அடித்து கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.