10000 ரன்களை கடந்த ரோகித் சர்மா...தொடரும் அசாத்திய சாதனை பயணம்..!!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இன்று இலங்கைக்கு எதிரான ஆசியக்கோப்பை ஒரு நாள் போட்டியில் 10000 ரன்கள் மைல்கல்லை எட்டி அசாத்திய சாதனை படைத்துள்ளார்.
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோகித்
உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணி மீதான தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 4-வது இடத்திற்கு இன்னும் சரியான வீரர்கள் இல்லை, ரோகித், கோலி ஃபார்மில் இல்லை என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்த நிலையில், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. அதே நேரத்தில் அவரின் பேட்டிங்கும் சரியாக இல்லை என்றும் விமர்சிக்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து தற்போது ரோகித் சர்மா சாதனை புரிந்துள்ளார்.
10000 ரன்களை கடந்தார்
ஆசியக்கோப்பையின் முதல் ஆட்டத்தில் நேபாள அணியை எதிர்கொண்ட போது, ரோகித் சர்மா 74 ரன்களை விளாசிய நிலையில், இரண்டாவது போட்டியில் 56 ரன்களை எடுத்து அசத்தினார். இன்று இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், ரோகித் சர்மா 10000 ரன்களை எட்டியுள்ளார்.
தனது 248-வது ஒருநாள் போட்டியில் 10000 ரன்களை எட்டிய ரோகித் 50 அரைசதங்களும், 30 சதங்களை அடித்துள்ளார். சச்சின், கங்குலி, டிராவிட், தோனி, கோலி ஆகியோரை அடுத்து 10000 ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா இணைந்துள்ளார். தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், ஆசியக் கோப்பையில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அரைசதத்தை கடந்த அவர் 53 ரன்களை கடந்த நிலையில் போல்ட்டாகி வெளியேறினார்.