சதமடித்து சாதனைப் படைத்த ரோகித் சர்மா - கதறிய இங்கிலாந்து வீரர்கள்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோகித் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.
இதனையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், கே எல் ராகுல் 22 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
பொறுப்பை உணர்ந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் நிதானமாக ரன் சேர்த்து வருகின்றனர். கே.எல்.ராகுல் 46 ரன்களில் வெளியேற ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதமடித்தார். அவர் 127 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். புஜாராவும் தன் பங்கிற்கு அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.
இந்த சதமானது வெளிநாட்டு மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவின் முதல் சதம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. இந்திய அணி வீரர்களை அவுட்டாக்க முடியாமல் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் விழி பிதுங்கியுள்ளனர்.