ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் சிக்கல் - தடைபடுமா உலகக் கோப்பை தொடர்?
இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவால் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாசடைந்த காற்று
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியும் சிறப்பாகவே உள்ளது.
இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்தியா அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த வகையில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஆனால் மும்பையில் தற்போது காற்றின் தரம் மாசடைந்து மோசமாக உள்ளது. காற்று தர அளவீட்டில் 201-300 வரை மோசமான காற்றாக கருதப்படுகிறது.
அந்த வகையில் ஒட்டுமொத்த மும்பை காற்றின் தரம் 150ஆக உள்ளது. அதாவது சுமாரான அளவில் உள்ளது. அதே சமயம், நகரின் முக்கிய இடங்களில் காற்றின் தரம் 250ஐ ஒட்டி உள்ளது. அதாவது மோசமான காற்றாக உள்ளது. இதனால் இதற்கு முன் மும்பையில் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் மோசமான காற்றால் பாதிக்கப்பட்டனர்.
ரோஹித் ஷர்மா பதிவு
அந்த அணியின் வீரர் ஜோ ரூட் கூறுகையில் "எங்கள் வீரர்களால் சுவாசிக்கவே முடியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மா விமானத்தில் இருந்தவாறு மும்பையில் வானம் புகை மண்டலமாக இருப்பதை புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
அதில் "மும்பை என்ன ஆச்சு? என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள், இதனால் இந்தியா-இலங்கை போட்டி தடைபடுமா, மும்பையில் இனிவரும் உலகக்கோப்பை போட்டிகள் தடைபடுமா என்று கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இப்படி ஒரு மோசமான சூழ்நிலையில் உலகக்கோப்பை போட்டியை நடத்த வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், அந்த பதிவை பார்த்து மற்ற அணிகளும் மும்பையில் உலகக்கோப்பை போட்டிகளில் ஆடுவது குறித்து புகார் தெரிவிக்க ஒரு வாய்ப்பை இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவே ஏற்படுத்தி விட்டதாக பிசிசிஐ வட்டாரத்தில் அவர் மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.