ஹிட்மேன்னா சும்மாவா.. சாதனை படைத்த ரோஹித் சர்மா
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ரோஹித் சர்மா ஒரு சில சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷர்துல் தாகூர் 57 ரன்களும், விராட் கோலி 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓலி போப் 81 ரன்களும், கிரிஸ் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் குவித்தது.
இதன்பிறகு 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 46 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த புஜாரா – ரோஹித் சர்மா கூட்டணி இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு மளமளவென ரன் குவித்தது.
மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சதமும் அடித்து அசத்தினார். வெளிநாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா அடிக்கும் முதல் சதம் இது தான்.
256 பந்துகளில் 127 ரன்கள் குவித்திருந்த ரோஹித் சர்மாவையும், 127 பந்துகளில் 61 ரன்கள் குவித்திருந்த புஜாராவையும் ஓலி ராபின்சன் தனது ஒரே ஓவரில் வெளியேற்றி அசத்தினார், இதன் மூலம் போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் குவித்துள்ள இந்திய அணி 171 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இந்தநிலையில், இந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய ரோஹித் சர்மா இதன் மூலம் ஒரு சில முக்கிய சாதனைகளுக்கும் சொந்தக்காரராகியுள்ளார்.
சவாலான இங்கிலாந்து கண்டிஷனில் சிறப்பாக ஆடிவரும் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 11000 ரன்களை எட்டிய தொடக்க வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து 2ம் இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. சச்சின் டெண்டுல்கர் 241 இன்னிங்ஸ்களில் 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய நிலையில், ரோஹித் சர்மா 246 இன்னிங்ஸ்களில் 11000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.