அந்த பையன் வேற லெவல் சார்...நானே பார்த்து அரண்டு போயிட்டேன் - கவுதம் காம்பீர்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் மிக சிறப்பாக பந்துவீசிய ஹர்சல் பட்டேலை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நேற்று நடைபெற்றது.

ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 34 ரன்களும், கப்தில் மற்றும் மிட்செல் தலா 31 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு கே.எல் ராகுலும், ரோஹித் சர்மாவும் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த கே.எல் ராகுல் 49 பந்துகளில் 70 ரன்களும், ரோஹித் சர்மா 36 பந்துகளில் 55 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.

இதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 1 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், போட்டியின் 18வது ஓவரின் முதல் இரண்டு பந்திலும் ரிஷப் பண்ட் இரண்டு சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் 17.2 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான கே.எல் ராகுல், ரோஹித் சர்மா, ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி பேசி வருகின்றனர்.

அந்தவகையில், தனது அறிமுக போட்டியிலேயே மிக சிறப்பாக பந்துவீசிய ஹர்சல் பட்டேலை முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், 'ஹர்சல் பட்டேலின் பந்துவீச்சு ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. ஹர்சல் பட்டேல்லின் பந்துவீச்சு முதல் போட்டியில் விளையாடும் வீரரை போன்று இல்லை.

அவரது பந்துவீச்சு முறை என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடர்களில் கடந்த 8 - 10 வருடங்கள் விளையாடியதன் மூலம் ஹர்சல் பட்டேல் அதிகமான விசயங்களை கற்றுள்ளார், அதுவே அவருக்கு தற்போது கை கொடுக்கிறது.

ஹர்சல் பட்டேலின் சிறப்பான பந்துவீச்சையும், அவரது முன்னேற்றத்தையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்