முதல் இந்திய வீரராக சாதனை படைத்த ரோகித் சர்மா - வாழ்த்தும் ரசிகர்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
சார்ஜா மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. தன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக கூல்டர் நைல் 4 விக்கெட்டுகளும், நீஷம் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி இஷான் கிஷன் அரைசதத்தால் 8.2 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா டி20 போட்டிகளில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார். இந்த போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் தனது 400வது சிக்ஸரை ரோகித் சர்மா பதிவு செய்தார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரோகித் சர்மாவை தவிர வேறு எந்த இந்திய வீரரும் 350 சிக்ஸர்களை தாண்டவில்லை. அவருக்கு அடுத்தப்படியாக சுரேஷ் ரெய்னா 325 சிக்ஸர்கள் அடித்து இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 320 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்திலும், தோனி 304 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.