ஐபிஎல் தொடரில் மும்பை கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம் - ரசிகர்கள் சோகம்
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
15வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 2வது நாள் நடந்த போட்டி ஒன்றில் மும்பை, டெல்லி அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் குவித்தது.178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய டெல்லி அணி 18.2 ஓவரிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனிடையே இந்த போட்டியால் ம்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தை விடவும் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி தாமதமாக பந்துவீசும் பட்சத்தில் ரோகித் சர்மா ஒரு போட்டியில் இருந்து தடை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.