எனக்கும் ரெஸ்ட் வேணும். விலகும் ஹிட்மேன் ரோஹித் சர்மா; கேப்டனாகும் ரஹானே

India Captain Rohit Sharma Ajinkya Rahane
By Thahir Nov 11, 2021 04:30 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடப்பு டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, டி.20 உலகக்கோப்பை தொடரை முடித்துவிட்டு நேராக இந்தியா வருகிறது.

இந்தியா வரும் நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரின் முதல் டி.20 போட்டி 17ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 தொடருக்கான இந்திய அணி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல் போன்ற இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் விராட் கோலி விளையாட வாய்ப்பு இல்லை,

அவர் பிசிசிஐ.,யிடம் தனக்கு கூடுதல் ஓய்வு தேவை என கோரிக்கை வைத்துள்ளதால், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும் ரோஹித் சர்மாவே வழிநடத்துவார் என கருதப்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவலின்படி, முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என தெரியவந்துள்ளது.

இன்று தேர்வாளர்கள் டெஸ்ட் அணி தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தியபோது, ரோஹித் சர்மாவின் பணிச்சுமையை கருத்தில்கொண்டு அவருக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்க முடிவு செய்திருப்பதாகவும்,

அதனால் ரஹானே தான் முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்துவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா ஓய்வு தேவை என்று கேட்டதால், அவர் டெஸ்ட் தொடரில் ஆடாததால் தான் ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களாக ஓய்வே இல்லாமல் விளையாடி வருவதால்,

சீனியர் வீரர்களின் பனிச்சுமையை குறைப்பதற்காக ரிஷப் பண்ட், ஷர்துல் தாகூர், பும்ராஹ் மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்களுக்கும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது.