ரோகிணி திரையரங்கு ஊழியர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல திரைப்படத்தை காண டிக்கெட் எடுத்துக்கொண்டு 6 சிறுவர்களுடன் சென்ற 10 பேரை மட்டும், திரையரங்க ஊழியர்கள் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.
ரோஹணி தியேட்டர் விவகாரம்
மேலும், அவர்கள் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதற்காக டிக்கெட் வைத்திருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரோகிணி திரையரங்கம் சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் U/A சான்று பெற்ற 'பத்து தல' படத்திற்கு சிறுவர்களை அழைத்து வந்ததால் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக, U/A சான்று பெற்ற படத்திற்கு 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்று திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தான் சிறுவர்களை தங்களது திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்கவில்லை எனவும், நரிக்குறவர்கள் என்பதற்காக அவர்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வன்கொடுமை தடுப்பு சட்டம்
அதேவேளையில், அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு 'பத்து தல' படத்தை உற்சாகமாக பார்த்த வீடியோவையும் திரையரங்க நிர்வாகம் வெளியிட்டது.
இந்நிலையில், நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக, கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், ரோஹிணி திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
குற்றச்சாட்டு குறித்து இதுவரை எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும், சம்பவம் தொடர்பாக திரையரங்க நிர்வாகத்திடம் நேரில் விளக்கம் கேட்கப்பட்டதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரோகிணி திரையரங்கு ஊழியர் மீது எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கான டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை என கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது