மின் கம்பிகளை ஆய்வு செய்யும் பாம்பு ரோபோ - சீனாவில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

China World
By Vinoja Oct 05, 2026 06:01 AM GMT
Report

சீனாவில் மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து சென்று அவற்றை ஆய்வு செய்யும் புதிய ரோபோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

யுனான் மாகாணத்தின் குன்மிங் பகுதியில் இந்த ரோபோவைப் பயன்படுத்தி மின் விநியோகக் கம்பிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மின் கம்பியைச் சுற்றிப் பிடித்தபடி நகரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் கேமராக்கள் மற்றும் பல்வேறு உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மின் கம்பிகளை ஆய்வு செய்யும் பாம்பு ரோபோ - சீனாவில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்! | Robotic Snakes Crawl Power Lines To Detect Faults

அவற்றின் உதவியுடன் மின் கம்பிகளில் ஏற்பட்டுள்ள சேதம், தேய்மானம் மற்றும் அதிக வெப்பம் உள்ளிட்ட குறைபாடுகளை துல்லியமாகக் கண்டறிய முடியும்.

இதுவரை இந்த ரோபோ மூலம் 130 கிலோமீட்டருக்கும் அதிகமான மின் விநியோகக் கம்பிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனிதர்கள் நேரடியாகச் சென்று மேற்கொள்ளும் ஆய்வுகளை விட சுமார் மூன்று மடங்கு வேகமாக பணிகளை முடிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக மின் கம்பிகளை ஆய்வு செய்வதற்கு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இத்தகைய இடங்களில் மின் கம்பிகளின் மீது நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள இந்த ரோபோ பயனுள்ளதாக அமைகிறது.

மின் கம்பிகளை ஆய்வு செய்யும் பாம்பு ரோபோ - சீனாவில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்! | Robotic Snakes Crawl Power Lines To Detect Faults

மேலும், மின் கம்பிகளில் காணப்படும் தடைகளைத் தாண்டிச் செல்லும் வகையில் ரோபோவின் உடல் நெகிழ்வானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் மனிதர்கள் சென்று ஆய்வு செய்வதற்கு சிரமமான மற்றும் ஆபத்தான பகுதிகளையும் எளிதாக ஆய்வு செய்ய முடிகிறது. மின் கம்பிகளில் ஏற்படக்கூடிய பழுதுகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம், மின்சார விநியோகத்தில் ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த ரோபோ உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.