“ரெய்னா ரசிகர்கள் என்னை திட்டினார்கள்..தோனி வெளிப்படையாக கூறினார்..அது எனக்கு மிகவும் பிடித்தது” - மனம் திறந்த ராபின் உத்தப்பா
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சென்னை அணி தம்மை தேர்வு செய்ததற்கு ரெய்னாவின் ரசிகர்கள் திட்டியதாக ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக வீரரான அஸ்வினுடன் உரையாடிய ராபின் உத்தப்பா,
“2021-ம் ஆண்டு ராஜஸ்தான் அணியிலிருந்து நான் சிஎஸ்கேவிற்கு வந்தேன். அன்று மாலையே கேப்டன் தோனி என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், எடுத்த உடனே பிளேயிங் லெவனில் உங்களுக்கு இடம் கிடைக்காது. உங்களுக்கான வாய்ப்பு வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் என்று வெளிப்படையாக சொன்னார்.”
மேலும், “5 நாட்களுக்கு ஒரு முறை அணியின் பயிற்சியாளர் என்னிடம் வந்து பேசுவார். அணியில் இடம் இல்லை என நான் வருத்தப்பட கூடாது என்பதற்காக சென்னை அணி எடுத்த நடவடிக்கை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிஎஸ்கேவில் இருக்கும் போது நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன்.
சிஎஸ்கே அணி தொடங்கியது முதலே ஃபிசியோ, நிர்வாகிகள் என யாருமே மாற்றம் செய்யப்படவில்லை. சென்னை அணியை பொறுத்தவரை ஒரு வீரருக்கு குறைந்தது ஐந்து, ஆறு போட்டியிலாவது வாய்ப்பு தருவார்கள்.
நீங்கள் சிறந்த வீரர் என்றால் உங்களுக்கு இன்னும் அதிக வாய்ப்பு கிடைக்கும். ஷேன் வாட்சனுக்கு ஒரு சிறந்த வீரர் என்பதால் தான் இறுதி வரை ஆட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பலனாக அவர் போட்டியை வென்று கொடுத்தார்.
ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி என்னை தேர்வு செய்த போது 80 சதவீதம் பேர் அதை வரவேற்றாலும், 20 சதவீதம் பேர் என்னை திட்டினர். அவர்கள் அனைவரும் ரெய்னாவை எடுக்காமல் என்னை ஏன் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
ஆனால் அவர்கள் மீது எனக்கு கோபம் ஏற்படவில்லை. ரெய்னா சிஎஸ்கே அணியின் உண்மையான சேவகன். அவர் மீது இருந்த விஸ்வாசம், பாசம் காரணமாக சில ரசிகர்கள் என்னை திட்டினார்கள்.” என பேசினார்.