லிப்ட் கேட்பது போல நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 4 பேர் கைது

crime Robbery Cheating
By Nandhini Apr 13, 2021 09:54 AM GMT
Report

மதுரவாயல் அருகே வாகனத்தில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்பது போல நடித்து மிரட்டி பணம், செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட இளம்பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த திருப்போரூர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (27). இவர் வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்து விட்டு மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது இளம்பெண் ஒருவர் லிப்ட் கேட்டு கையை காட்டி வழி மறித்துள்ளார். இதனையடுத்து கணேஷ் பைக்கை ஓரம் கட்டி நிறுத்தியுள்ளார்.

அப்போது அந்த பெண் லிப்ட் கேட்டுள்ளார். உடனே அந்தப் பகுதியில் மறைந்திருந்த 3 வாலிபர்கள் வேகமாக வந்து கணேஷ் வழிமறித்து மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனைப் பறித்துள்ளனர். அப்போதுதான் கணேஷுக்கு அவர்கள் மூவரும் அந்த இளம்பெண்ணின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது. இதனையடுத்து, கணேஷ் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து 4 பேரையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இது குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இளம்பெண் உள்பட 4 பேரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில் மதுரவாயல் அபிராமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (25), உதயகுமார் (19), நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (25), பரசுபாலன் (19) என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதில் முத்துலட்சுமி இருசக்கர வாகனத்தில் தனியாக செல்பவர்களிடம் லிப்ட் கேட்பது போல கேட்கும் போது, மற்ற மூவரும் சேர்ந்து வாகனத்தில் வந்தவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன், செயின் போன்றவற்றை வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இதே போல இவர்கள் வேறு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.