தமிழகத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் - கேரளாவில் விபத்தில் பலி
கன்னியாகுமரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவர் திருவனந்தபுரம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த பிரேமிகா என்பவர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை பணிமுடித்துவிட்டு வழக்கம்போல் அழகியமண்டபம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது குறுக்கே இருசக்கர வாகனம் வந்து பிரேக் பிடிக்கவே பிரேமிகா வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரில் ஒருவன் இறங்கி வந்து அவரின் கழுத்தில் கிடந்த பத்து சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றான். இதுகுறித்து தக்கலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருமாமூடு பகுதியில் இரண்டு இளைஞர்கள் சாலையில் உள்ள டிவேடரில் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் . ஒருவர் காயமடைந்தார். அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்நேரம் அவரது பாக்கெட்டிலிருந்து அறுந்த நிலையில் பத்து சவரன் தங்க சங்கிலி இருப்பதை பார்த்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் திருவனந்தபுரம் கடினங்குளம் பகுதியை சேர்ந்த சஜாதுஹான் (17) என்பதும், காயமடைந்த நபர் கோட்டையம் ராமபுரத்தை சேர்ந்த அமல் (21) என்பதும் தெரிய வந்தது. குமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் செயின் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் வெளிவந்தது.
இதனைத் தொடர்ந்து கேரள போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அமலிடம் நடத்திய விசாரணையில் ஆடம்பர இருசக்கர வாகனங்களில் நண்பர்களுடன் இணைந்து கேரளாவில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் இறந்த சஜாதுஹான் கடந்த மூன்று தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இவர்களில் யார் போலீசில் சிக்கினாலும் திருட்டு நகைகளில் கிடைக்கும் பணத்தை கொண்டு இவர்களுக்காக சில வழக்கறிஞர்கள் மூலம் ஜாமீனில் வெளி வருவதும் தெரியவந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை குமரி போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.