சிசிடிவி கேமராவில் சிக்காமல் இருக்க திருடன் செய்த செயல் - அதிர்ச்சியில் பொதுமக்கள்
புதுக்கோட்டையில் பேக்கரியில் நடந்த திருட்டு சம்பவத்தில் திடீர் திருப்பமாக நடைபெற்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியை மர்ம நபர் ஒருவர் செங்கல்லால் உடைத்து அதில் இருந்த கம்பிகளை நீக்கியுள்ளார். பின்னர் மெதுவாக பேக்கரிக்குள் நுழைந்துள்ளார்.
தொடர்ந்து பணம் இருக்கும் கல்லாவில் தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் போது தான் கடையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை காண்கிறார். தான் எப்படியும் மாட்டி விடுவோம் என்ற நினைப்பில் திருடன் சிசிடிவி கேமராக்களையும், அதன் மானிட்டர்களையும் கழற்றி எடுத்து சென்றுள்ளார்.
ஆனால் காட்சிகளை பதிவு செய்யும் ஹார்ட் டிஸ்க்கை மட்டும் விட்டுவிட்டு செல்லும் நிலையில் அந்த திருடனின் முகம் சிசிடிவியில் தெளிவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.