சுதந்திர தின எதிரொலி... சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
நாளைய தினம் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளதால், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சுதந்திர தின கொண்டாட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையின் பல இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல் , எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், விமான நிலையம், நகரின் முக்கிய பகுதிகள் என பல இடத்திலும் பாதுகாப்பு பல பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்
இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "சென்னை கோட்டையில் நாட்டின் 76வது சுதந்திர நாள் விழா செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படவுள்ள நிலையில் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், நேப்பியா் பாலம் முதல் போா் நினைவுச்சின்னம் வரையிலான காமராஜா் சாலை, போா் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச்சாலையில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக பாரிமுனையை வந்து அடையலாம் என கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் மறுமார்கமாக பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பில் இருந்து பல்லவன் சாலை வழியாக வாலாஜா சாலை வந்து காமராஜா் சாலையை சென்றடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.