சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு- திருமணமான 20 நாளில் சோக சம்பவம்
லால்குடி அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் காவலர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் மணிகண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், இன்று மதியம் பணி முடிந்து ரஞ்சித்குமார் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
சமயபுரம் டோல்கேட் அடுத்த தாளக்குடி பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே வந்த ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சாலையில் இருந்த இரும்பு கம்பியின் மீது மோதியதில் ரஞ்சித் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போக்குவரத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித் குமாருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.