தமிழர்களின் எண்ணங்களில் விஷம் ஏற்றப்பட்டுள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி
இந்த நிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மொழி சமஸ்கிருதம் என ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆர்.என்.ரவி
சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிலையமான 'டிடி தமிழ்' சார்பில் இன்று மாலை, இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பேசிய அவர், "தமிழக மக்களின் எண்ணங்களில் 50 ஆண்டுகளாக விஷம் ஏற்றப்பட்டுள்ளது. இத்தகைய எண்ணங்கள், நாட்டின் பிற பகுதிகளில் இருந்து நமது மக்களை பிரித்துள்ளது. இந்த நிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த மொழி சமஸ்கிருதம்.
சமஸ்கிருதப் பாடம்
ஆனால் இன்று தமிழ்நாட்டு பல்கலைக்கழங்களில் சமஸ்கிருதப் பாடம் இல்லை. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மிகத் தீவிரமான துறையாக விளங்கிய சமஸ்கிருத துறை இன்று அது மரித்துப் போய் விட்டது. இதுபோன்ற செயல்கள்தான், தமிழகத்தை நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து துண்டித்து, தனிமைப்படுத்தியிருக்கிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைப் பிரிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆன்மிக, கலாச்சார தலைநகரம் தமிழகம். சங்க காலம், பக்தி இயக்கம் தொடங்கி ஆழ்வார்களும், நான்மார்களும் மூலம்தான் நாட்டின் பல பகுதிகளுக்கு ஆன்மிகம், கலாச்சாரம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
தமிழை வைத்து அரசியல்
10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் குரலை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், இன்று உலகின் எந்தவொரு முடிவையும், இந்தியா இல்லாமல் எடுக்க முடியாது. இந்தியாவுக்குள் வசித்துக் கொண்டே, சிலர் இந்தியா குறித்து தவறாக பேசுகின்றனர்.
தமிழ், தமிழ் என்று கூறி இங்கே சத்தமிட்டுக் கொண்டிருப்பவர்கள் யாரும் தமிழுக்காக எதையும் செய்யவில்லை. இங்கிருக்கும் சிலர் வெறுமனே தமிழைப் பற்றி பேசிக் கொண்டும், அதை வைத்து அரசியல் செய்தும் வருகின்றனர். தமிழின் பெயரால் மக்களிடம் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றனர்.
தமிழகத்தில் மட்டுமே 3வது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர். பிற மாநிலங்களில் அனுமதிக்கின்றனர். தமிழுக்காக மத்திய அரசும், பிரதமர் மோடியும் மட்டுமே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்" என பேசினார்.