தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு

rn ravi tamilnadu governor
By Fathima Sep 18, 2021 04:38 AM GMT
Report

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்.

தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அண்மையில் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் அவர்கள் நியமித்துள்ளார்.

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி அவர்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் சிலர் விமான நிலையத்திலேயே அவரை வரவேற்றனர்.

அங்கு ஆளுநருடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடியுள்ளார். இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் வைத்து காலை 10.30 மணியளவில் புதிய ஆளுநர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் தமிழகத்தின் 25-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்கும் நிலையில், அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அவர்கள் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட சில அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.