தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடமாற்றம்: புதிய ஆளுநர் யார் தெரியுமா?
தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் இருந்து வந்த வி.பி.சிங் பட்னோரின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என் ரவி நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பீகாரை சேர்ந்த ரவீந்திர நாராயண ரவி காவல் துறை அதிகாரி மற்றும் இந்திய உளவுத்துறையின் முன்னாள் சிறப்பு இயக்குனராக பணியாற்றியவர்.
அவர் வகித்து வந்த நாகாலாந்து ஆளுநர் பணியினை அசாம் மாநில ஆளுநர் ஜெக்தீஷ் முகி கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.