G20 மாநாடு: கோயிலில் வழிபட்ட இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் மனைவி அக்ஷதா!
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரின் மனைவி அக்ஷதா இருவரும் அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
ஜி20 மாநாடு
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது.
மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடாக இணைக்கப்பட்டது. இதன் காரணமாக ஜி20 அமைப்பு ஜி21 அமைப்பாக மாறியுள்ளது.
கோயிலுக்கு சென்ற ரிஷி சுனக்
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அவரின் மனைவி அக்ஷதாவுடன் டெல்லி அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு அங்கு ஆன்மிக சேவையில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
ரிஷி சுனக்கின் வருகையையொட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நேரடியாக மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மற்ற உலக தலைவர்களுடன் சேர்ந்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார் ரிஷி சுனக்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு வந்த தலைவர்களை பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி வரவேற்றார். அவர்கள் அனைவரும் அங்கு மரக்கன்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து ஜி-20 மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டத்திற்கு உலக தலைவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.