புதிய சாதனைப் படைத்த ரிஷப் பண்ட - ஆடிப்போன கிரிக்கெட் உலகம்
இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதனிடையே 2 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் ஒரு இன்னிங்ஸில் அதிவேக அரைசதம் கண்டதால் அவர் தொடரின் நாயகனாக கௌரவிக்கப்பட்டார். இந்த விருதை வென்றதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தொடர் நாயகன் விருது வென்ற இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர்கள் தொடர் நாயகன் விருது வெல்வது என்பது எப்போதாவது நடைபெறும் சம்பவமாகும். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவனான ஆடம் கில்கிறிஸ்ட்டே இந்த வரிசையில் இடம்பெற்றிருந்தார். அதற்கு அடுத்தப்படியாக ரிஷப் பண்ட் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.