ஒரு ரன்னில் தோனியின் முக்கிய ரெக்கார்டை தவறவிட்ட ரிஷப் பண்ட் - ரசிகர்கள் அதிருப்தி
தோனியின் கேட்ச் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட், அவரின் முக்கிய சாதனை ஒன்றை படைக்க நூழிலையில் தவறவிட்டுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த 26 ஆம் தொடங்கிய இப்போட்டியில் ஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து 129 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கியுள்ள தென்னாப்பிரிக்கா அணி போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 5 ஆம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 24 வயதில் தோனியின் நீண்ட கால ரெக்கார்டை உடைத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்களை எடுத்தவர்கள் பட்டியலில் தோனி 3வது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் தோனி 90 டெஸ்ட்களில் விளையாடி 294 முறை விக்கெட் எடுத்துள்ளார். மேலும் அதிவேகமாக 100 விக்கெட்களை (36 டெஸ்ட் ) சாய்த்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார்.
அந்த சாதனையை ரிஷப் பண்ட் நேற்று தகர்த்தார். 26 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ரிஷப் பண்ட் நேற்று தனது 100வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இதனால் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஆனால் தோனியின் மற்றொரு முக்கிய சாதனையை தகர்க்க பண்ட் தவறிவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் 749 ரன்களை விளாசி தோனி சாதனை படைத்திருந்தார். அதனை தகர்க்க தென்னாப்பிரிக்க தொடரில் ரிஷப் பண்டுக்கு நேற்று வாய்ப்பு ஏற்பட்டது. அவர் 2021ம் ஆண்டில் மட்டும் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 748 ரன்களை குவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரே ஒரு ரன்னை மட்டும் கூடுதலாக அடித்திருந்தால், தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்திருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.