என்ன யாராலயும் அழிக்க முடியாது... மீண்டும் இந்திய அணிக்கு வந்த முக்கிய வீரர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரிஷப் பண்ட் இந்திய அணியினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதனிடையே யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியை காணச் சென்ற இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லண்டன் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு நடந்த சோதனையில் நெகட்டிவ் என வந்ததால் மீண்டும் ரிஷப் பண்ட் இந்திய அணியுடன் சேர அனுமதி அளிக்கப்பட்டது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பண்ட்தான் விக்கெட் கீப்பரின் இடத்திற்கு முதல் தேர்வாக உள்ளார். ஆனால் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனால் அவருக்கு இந்த வாரம் முழுவதும் தீவிர பயிற்சி வழங்கப்பட உள்ளது.
அதேசமயம் ரிஷப் பண்ட் உடன் கொரோனா உறுதி செய்யப்பட்ட பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன், அலுவலர் தயானந்த் கிரானி ஆகியோர் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.