இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், பும்ரா நீக்கம் - பிசிசிஐ அதிரடி
டெஸ்ட் தொடரிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் நீக்கம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக முதல் நாள் ஆட்டத்திலேயே ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். எனினும், இரண்டாவது நாள் அன்று அதே காயத்துடன் வந்து மீண்டும் பேட்டிங் செய்து அரை சதமடித்தார்.
அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை. இந்நிலையில், ரிஷப் பண்ட் ஐந்தாவது போட்டிக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும், அவருக்குப் பதிலாக நாராயணன் ஜெகதீசன் மாற்று விக்கெட் கீப்பராக அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கம்பீர் விளக்கம்
மேலும் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி பும்ரா மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளார். எனவே ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்டில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கம்பீர் பேசுகையில், "அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் பிட்டாக உள்ளனர். பும்ரா விளையாடுவது குறித்து கடைசி நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
பும்ரா விளையாடாமல் போனால் கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துருவ் ஜூரில் களமிறங்குவார். பும்ரா விளையாடும் பட்சத்தில் சிராஜிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஆகாஷ் தீப் இடம் பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.