AI வளர்ச்சியால் தங்கத்தின் விலை அதிகரிக்குமா? - உலக தங்க கவுன்சில் எச்சரிக்கை
ஏஐ தொழில்நுட்பம்
ஏஐ தொழில்நுட்பம் நாளுக்கு நாள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்று வருகிறது. சில துறைகளில் மட்டும் பயன்படுத்தப்பட்ட ஏஐ தொழில்நுட்பம் தற்போது அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகிறது.
இந்நிலையில் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் தேவை
மின்னணுவியல் துறையில் தங்கத்தின் தேவை கடந்த 2010ம் ஆண்டு 328 டன் என்ற உச்சத்தை எட்டியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்து 2023 ஆம் ஆண்டு 249 டன் ஆக குறைந்தது.
மின்னணு சாதனங்களில் தங்கத்தின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது காரணம் தங்கம் சிறந்த மின்சார கடத்தியாக செயல்படுவதோடு விரைவாக அரிக்காது. மேலும், தங்கத்தின் உயர்ந்த கடத்துத்திறன் குறைந்த ஆற்றல் இழப்புடன் அதிக வேகத்தில் தரவை செயலாக்கி அனுப்புவதை உறுதி செய்கிறது.
ஆகையால் சிப்களில் தங்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. இதனால் 2001 மற்றும் 2011 காலப்பகுதியில் தங்கத்தின் விலை அதிகரித்ததால், மின்னனு பொருட்களின் உற்பத்தியாளர்கள் தங்கத்திற்கு மாற்றாக, வெள்ளி, செம்பு போன்ற பொருட்களை பயன்படுத்தி தங்கத்தின் தேவையை குறைத்தனர்.
பிற துறைகளில் தங்கம்
தற்போது, சுகாதாரம், புத்தாக்கம் மற்றும் செயல்திறனை அதிகரிக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் அதிகம் முதலீடு செய்து வருவதால், தங்கத்தின் தேவை மேலும் அதிகரித்து உள்ளது.
ஏஐ மட்டுமல்லாது, மருத்துவதுறையில் உள்ள சிகிச்சை சாதனங்கள், நோய் கண்டறிதல், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கான முக்கியமான கூறுகளை தயாரிப்பது, துாய்மை எரிசக்தி தொழில்நுட்பங்களில் ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் கார்பன் டை ஆக்சைடு மாற்றம் போன்ற செயல்முறைகளிலும் தங்கத்தின் தேவை உள்ளது.
தங்க விலை
முந்தைய ஆண்டுகளில் இவ்வாறு தங்கத்தின் தேவை அதிகரித்த போது, தங்கத்திற்கு மாற்றாக வெள்ளி தாமிரத்தை கொண்டு சமாளித்த நிலையில், தற்போது ஏஐ தொழில்நுட்பத்திற்கு தங்கம் அத்தியாவசியமாகியுள்ளது. வெள்ளி தாமிரம் ஆகியவை அரிப்பை எதிர்க்கும் திறன் கொண்டவை அல்ல என்பதால் சாதனத்தின் பாதுகாப்பு மற்றும் ஆயுட்காலம் குறைகிறது.
தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது தங்கத்தின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.7,200க்கும், ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கும் விற்பனை செய்யப்படுகிறது.