மணிப்பூர் கலவரம் - போலீஸ் அதிகாரி,சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு !
மணிப்பூரில் நடந்த கலவரத்தின்போது போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து தரக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதற்கு சூகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். கடந்த மே மாதம் 03ம் தேதி இருவருக்கிடையேயும் மோதல் ஏற்பட்டு 2 மாதங்களாக அங்கு தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது.
இந்த வன்முறையில் சுமார் 120 பேர் பலியாகி உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மலைப்பிரதேச பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்த மர்ம கும்பல் அங்குள்ள கிராமவாசிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
பல கிராமங்களில் புகுந்து தீ வைப்பிலும் ஈடுபட்டது. இதன் காரணமாக அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கிச் சூடும் நடத்தி உள்ளனர்.
இதனால், பதிலுக்கு மற்றொரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்த அங்கு கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர், சிலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.