அதிமுக வெற்றி பெற்றதும் ஒவ்வொரு வீட்டிலும் காலிங் பெல் அடித்து இதை செய்வோம்: ஆர்.பி. உதயகுமார்
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றவுடன் வீட்டின் காலிங் பெல் அடித்து ஒவ்வொரு வீட்டிலும் வாஷிங் மெஷின் கொடுக்கப்படும் என அமைச்சர் R.B.உதயகுமார் கூறியுள்ளார். வருகின்ற 2021ம் ஆண்டிற்கான சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அதனைதொடர்ந்து, மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் R.B.உதயகுமார் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை பகுதியில் திறந்த வெளி பிரச்சார வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்களின் சிறப்பான வரவேற்புக்கு மத்தியில் அமைச்சர் பேசியதாவது, பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளையும் அதிமுக அரசு நிறைவேற்றி வருவதாகவும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதுடன் வீட்டில் காலிங் பெல் அடித்து வீடு தேடி வந்து வாஷிங் மெஷின் வழங்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிமுக தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஒவ்வொரு வீட்டிற்கு வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசம் முதல் கேபிள் கட்டணம் முழுவதும் இலவசம் என சிறப்பான திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தார். ஒவ்வொரு குடும்பத்திலும் நிதியமைச்சராக திகழும் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் எனும் திட்டமானது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றது சிறப்பம்சமாகும் என கூறிய அமைச்சர், தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகையினை ரூ.1000-லிருந்து 2000 உயர்த்தியுள்ளதை பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
மேலும் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும், நகைக்கடன் ரத்து செய்யப்படும் என வெறும் வாய்ச்சொல்லாக மட்டும் கூறியவர்கள் மத்தியில், அந்த கடன்களை எல்லாம் ரத்து செய்து பெருமை சேர்த்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என கூறினார்.