இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன் இவர் தான் - அடித்துச் சொல்லும் ரிக்கி பாண்டிங்
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட அனைத்து தகுதிகளும் இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகிய நிலையில் ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேசமயம் டெஸ்ட் அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது. கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா முதன்மை தேர்வாக இருக்கலாம். ஆனால் அவருக்கு தசைப்பிடிப்பு பிரச்சினை இருப்பதால், டெஸ்ட் போன்ற நெடுந்தொடர்களில் அவர் தாக்குப்பிடிப்பது கடினம். மேலும் அவருக்கு வயதும் 35 நெருங்கிவிட்டதால், ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கக்கூடாது என முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரோகித் சர்மாவை எதிர்ப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் பதிலடி கொடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக பதவியேற்ற போது நானும் அணியில் இருந்தேன். கேப்டனாக நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் என் ஃபார்ம் மோசமாக இருந்ததால், நேரடியாக இளம் வீரர் ரோகித் சர்மாவிடம் அணியை ஒப்படைத்தனர். அன்றில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
ஐபிஎல் தொடரில் எந்த ஒரு கேப்டனும் ரோகித் சர்மாவை போன்று 5 கோப்பைகளை வென்றுக்கொடுத்ததில்லை. இந்திய அணியையும் அவ்வபோது வழிநடத்தி வெற்றி கண்டுள்ளார். இதனை விட அவர் சிறப்பான கேப்டன்சி செய்வார் என்பதை நிரூபிக்க வேறு என்ன வேண்டும். அவரிடம் டெஸ்ட் அணியை ஒப்படைப்பது தான் சரி என பாண்டிங் கூறியுள்ளார்.