இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாத வருவாய்துறை: அமைச்சர் அதிரடி நடவடிக்கை
மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கும் வருவாய்த்துறை, இடைத்தரகர்களின் குறுக்கீடு இல்லாத துறையாக நவீனப்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்றாடம் பொதுமக்களுக்கு சேவை வழங்குகிற பழமைவாய்ந்த வருவாய்த் துறையின், மாறிக் கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப, மக்களுக்கு வழங்குகிற நலத்திட்ட பலன்கள், குறிப்பாக முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா வழங்குதல் போன்றவற்றை இடைத்தரகர்கள் இடையூறு இன்றி, நேரிடையாக ஆன்லைனில் விண்ணப்பித்து, அதிகாரிகளிடமிருந்து பலன்கள் விரைந்து கிடைக்கும் விதமாக கணினிமயமாக்குதலில் நவீன யுக்தியை புகுத்தும் பணிகள் முதலமைச்சரின் மேலான வழிகாட்டுதலின் பேரில் துரிதமாக நடைபெற்றுக் கொண்டு இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும். என்றும், கொரோனா 3ம் அலை வரக் கூடாது என்பதே அனைவரின் விருப்பம்.
இருந்தாலும் கொரோனா மூன்றாம் அலையில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என்ற மருத்துவ உலகின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, குழந்தைகள் மருத்துவமனைகள் மட்டுமன்றி அனைத்து மருத்துவ மனைகளிலும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அனைத்து வசதிகளுடன் கூடிய படுக்கைகளுடன் தயார் நிலையில் வைத்து இருக்கிறோம்", என தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.