தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி!
தெலுங்கானா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் ஆலோசனை நடைபெற்றது.
இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தெலுங்கானா மாநில மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். அந்த ஆலோசனையில் தெலுங்கானா மாநில முதலமைச்சராக 'ரேவந்த் ரெட்டி' ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ரேவந்த் ரெட்டி
இதனைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்த ரேவந்த் ரெட்டி, ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் நடந்த புதிய அமைச்சர் சபை பதவி ஏற்பு விழாவில், ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும், 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். தெலுங்கானா மாநில முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.