தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது - அல்லு அர்ஜுனுக்கு ரேவந்த் ரெட்டி பதிலடி!
நான் முதலமைச்சராக இருக்கும்வரை தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியுள்ளார்.
அல்லு அர்ஜுன்
ஹைதராபாத்தில் கடந்த 4-ந்தேதி புஷ்பா 2 சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சந்தியா திரையரங்கத்துக்கு நடிகர் அல்லு அர்ஜூன்,நடிகை ராஷ்மிகா, இசையமைப்பாளர் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் வந்த மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் முளைசாவு அடைந்து உயிரிழந்தார். இந்த விவகாரம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு இடைக்கால ஜாமினில் வெளியே வந்தார்.
புஷ்பா 2 பிரீமியர் ஷோ.. தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம் - நெருக்கடியில் சிக்கிய அல்லு அர்ஜுன்!
இது தொடர்பாகச் சட்டசபையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்தார். அப்போது பேசியவர்,’’ 4-ந்தேதி திரையரங்கத்துக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜூனை காவல்துறை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.அதன்பிறகு திரும்பிச் செல்லும்போது காரின் ரூஃப்டாப்பை திறந்து ரசிகர்களை நோக்கிக் கையசைத்துள்ளார்.
ரேவந்த் ரெட்டி அதிரடி!
அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்குப் புரியவில்லை. பாதிப்படைந்த சிறுவனின் குடும்பம் அவனின் ஆசைகளை நிறைவேற்றப் பல தியாகங்களைச் செய்துள்ளது. அவர்கள் மீது அனுதாபம் காட்டாமல் அல்லது அவர்களுடன் நிற்காமல் சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
அல்லு அர்ஜூன் காலை இழந்தாரா அல்லது கண் பார்வையை இழந்தாரா?. அவருடைய கிட்னி பாதிக்கப்பட்டதா? என்று ஆவேசமாகக் கூறினார். மேலும் நான் முதலமைச்சராக இருக்கும்வரை தெலங்கானாவில் திரைப்படங்களுக்கு இனி சிறப்புக்காட்சிகள் கிடையாது .
திரைத்துறைக்குச் சிறப்புச் சலுகைகள் எதுவும் கிடைக்காது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.