சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!
சென்னை மற்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 71.
முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன்
1955 ஜூன் 12ஆம் தேதி கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள கர்நத்தம் கிராமத்தில் பிறந்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் 1983ஆம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார்.

2009ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2016 பிப்ரவரியில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 2017 ஜூன் 12ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
நீதித்துறையில் நிலவும் ஊழல் மற்றும் சாதிப் பாகுபாடு குறித்து வெளிப்படையாகப் பேசியதன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர்.
சக நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
இதன் மூலம் பதவியில் இருக்கும்போதே சிறைத்தண்டனை பெற்ற முதல் உயர்நீதிமன்ற நீதிபதி என்ற சர்ச்சைக்குரிய வரலாற்றையும் அவர் பெற்றார். அவரது மறைவுக்கு நீதித்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.