திருச்சி நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடுகள்: வெளியான அறிக்கை
தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்காக நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சி திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் இன்று மாலை 4.15 மணிக்க நடைபெறவுள்ளது.

க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச்சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
குறிப்பாக பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், சிறுவர்- சிறுமியர், பள்ளி மாணவ- மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான அனுமதிசீட்டு வழங்கப்படவில்லை, இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம்.
காவல்துறையின் வழிகாட்டுதலின் படி, பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும்போது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
மேலும் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.