புதுச்சேரியில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்படும் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

election tamilnadu high court pondicherry
By Jon Apr 05, 2021 11:43 AM GMT
Report

தமிழகத்தோடு சேர்த்து புதுச்சேரிக்கும் நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் ஏப்ரல் 4-ம் தேதி மாலை உடன் நிறைவடைந்தது. இந்நிலையில் புதுச்சேரி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. தேர்தல் சமயத்தில் எதற்காக 144 தடை உத்தரவு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்த ஊரடங்கு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு மீதான விசாரணையில் புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை உத்தரவு வழங்க ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது என்றும், முந்தைய தேர்தல்களிலும் இதுபோன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாகவும் புதுச்சேரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த விளக்கம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எல்லா வழக்குகளிலும் மரண தண்டனை கொடுத்து விடுகிறோமா? சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 144 தடை உத்தரவு குறித்த சரியான விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி நிர்வாகம் சரியாக விளக்கம் அளிக்காவிட்டால் தடை உத்தரவு ரத்து செய்யப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.