பிறந்தநாளுக்கு கேக் வெட்டியது ஒரு குற்றமா? ரூ.1300 பில் போட்டு ஷாக் கொடுத்த ரெஸ்டாரண்ட்!
ரசீதில் கேக் வெட்டியதற்கான சேவைக் கட்டணம் ரூ.1300 வசூலித்த ரெஸ்டாரன்ட்.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இத்தாலியில் ஃபேபியோ ப்ரீகோலேடோ என்பவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பினோ டொரினீஸ் எனும் பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றுக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அந்த ரெஸ்டராண்டின் மெனுவில் கேக் வகைகளே இல்லை என்பதால் தங்களுடைய சொந்த கேக்-ஐ கொண்டு வந்து அவர்கள் வெட்டியுள்ளனர் . இதனையடுத்து பிறந்தநாள் பார்ட்டி முடிந்து அவர்கள் பெற்றுக் கொண்ட ரசீதில், கேக் வெட்டியதற்கான சேவைக் கட்டணம் என்ற பெயரில் 15 யூரோக்கள் (ரூ .1331 ) செலுத்த வேண்டும் என்று போடப்பட்டிருந்தது.
இதனால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைத்தள பதிவு மூலமாக ஃபேபியோ பகிர்ந்து கொண்ட தகவலில் "நாங்கள் 10 பேர் சென்றிருந்தோம். அங்கு பரிமாறப்பட்ட பீட்சா மிக நன்றாக இருந்தது. சேவையிலும் எந்த குறைபாடும் இல்லை. ஆனால், நாங்கள் கொண்டு சென்ற கேக்-ஐ வெட்டியதற்கு சேவைக் கட்டணமாக 15 யூரோக்கள் வசூலித்து விட்டனர். நாங்கள் ஆர்டர் செய்திருந்த பீட்ஸா, குளிர்பானங்கள் ஆகியவற்றுடன் சேர்த்து இந்த கட்டணத்தையும் வசூல் செய்துவிட்டனர்.
ரெஸ்டாரன்ட் மறுப்பு
தன்னுடைய 40 ஆண்டுகால அனுபவத்தில் எந்தவொரு இடத்திலும் இதுபோன்ற மோசமான அனுபவம் கிடைத்ததில்லை என்றும அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து அந்த ரெஸ்டாரண்ட் நிர்வாகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில் "வாடிக்கையாளர் உள்ளே வந்ததுமே நாங்கள் கேக் கொண்டு வந்திருக்கிறோம் என்று தெரியப்படுத்தினர்.
ஆனால், எங்கள் இடத்தில் தயார் செய்யாத உணவு மூலமாக ஏதேனும் எதிர்மறை விளைவுகள் (வயிற்று வலி, வயிற்றுப்போக்கு) ஏற்படக் கூடும் என்று நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். ஆனால், விடாப்பிடியாக அதை வைத்து கொண்டாடினார்கள். உண்மையில், நாங்கள் தயார் செய்யாத உணவுப் பொருளை சாப்பிட அனுமதிப்பதன் மூலமாக ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை’’ என்று கூறினார்.
மேலும் வாடிக்கையாளர்கள் கொண்டு வந்திருந்த கேக் மிக, மிக சிறியதாக இருந்தது என்றும், அதை மொத்த விருந்தினர்களான 10 பேருக்கு பங்கு வைக்கும் வகையில் ரெஸ்டாரண்ட் பணியாளர் மிகுந்த சிரமத்திற்கு இடையே வெட்டிக் கொடுத்தார் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.