"ஏன் எழுந்து நிற்க வேண்டும்? " - தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அலட்சியம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று 73-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அந்தந்த மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கட்சி அலுவலகங்களில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அந்தவகையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தின விழாவில், தமிழக அரசின் மாநிலப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.
அண்மையில் அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்து அமைப்புகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்றும்,
அவ்வாறு தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
ஆனால் அரசு அதிகாரிகளே அதனை பின்பற்றாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ஏன் எழுந்து நிற்கவில்லை என ஊடவியலாளர்கள் RBI அதிகாரிகளிடம் கேட்டதற்கு,
“அதற்கு நாங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும் எனவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது நிற்க வேண்டியது கட்டாயமில்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” என கூறி தமிழ் தெரிந்த அலுவலர்களே வாதம் செய்ததுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி , பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.