வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு: சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றிய எடப்பாடி
அதிமுகவின் முக்கிய கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழகத்தில் எம்.பி.சி பிரிவினருக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் வன்னியர் சமூகத்திற்கு உரிய இடம் கிடைக்கவில்லை என பாமக கூறி வந்தது. மேலும் வன்னியர்களுக்கு என்று தனியாக 20% இடஒதுக்கீடு வேண்டும் எனக் கூறி வந்தது.
வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவளிக்கும் கட்சிக்கே ஆதரவு என தெரிவித்து வந்தது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக பாமக நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்தனர். தேர்தல் ஆணையம் இன்று மாலை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. அதற்குப் பிறகு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அரசு முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.
எனவே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்.பி.சி இடஒதுக்கீடு மூன்றாக பிரிக்கப்படுகிறது. அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதமும், சீர்மரபினருக்கு 7 சதவிகிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2.5 சதவிகிதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தற்காலிகமானது தான் என்றும் ஆறு மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வந்த பிறகு இது மாற்றியமைக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்திற்கான அந்தர்பல்டி இது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் இது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.