வரலாற்று சாதனை..! சமையல் எண்ணெயில் பறந்த பயணிகள் விமானம் - கட்டணம் குறையுமா?
சமையல் எண்ணெய் மூலம் பயணிகள் விமானத்தை பறக்க வைத்து ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
காற்று மாசு
உலக சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது கார்பன் உமிழ்வு. அதற்கு காரணமாக இருப்பது நாம் பயன்படுத்தும் வாகனங்கள்தான். இதனைக் கட்டுப்படுத்த இன்றைய உலகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் இருசக்கர வாகனங்கள் தொடங்கி, ரயில்கள் வரை அனைத்து மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பசுமை எரிபொருட்களுக்கு மாறி வருகிறது. ஆனால் விமானம் மட்டும் இன்று வரை ஒயிட் பெட்ரோல் மூலம் மட்டுமே இயங்குகிறது. சாலைகளை போலவே வானில் பறக்கும் விமானங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விமானம் விரைவான பயணத்தை வழங்குவதால் பெரும்பாலானவர்கள் விமானப் பயணத்தையே விரும்புகின்றனர். வரும் நாட்களில் விமானங்களின் பெருக்கம் இன்னும் அதிகரிக்கும் என்பதால், அதனால் ஏற்படும் காற்று மாசும் அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பசுமை எரிபொருள்
இந்நிலையில், பழைய சமையல் எண்ணெய், காய்கறிக் கழிவுகள், சோளத்தட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பசுமை எரிபொருள் மூலம் 'விர்ஜின் அட்லாண்டிக்' நிறுவனத்தின், போயிங் (Boeing) 787 ரக பயணிகள் விமானத்தை லண்டன் ஆராய்ச்சியாளர்கள் பறக்க வைத்துள்ளனர்.
இந்த விமானம் 5 டன் பசுமை எரிபொருளை நிரப்பி, லண்டனிலிருந்து புறப்பட்டு சென்று நியூயார்க் நகரத்தில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. சோதனை முயற்சியாக, இயக்கப்பட்டதால், இதில் பயணிகள் யாரும் செல்லவில்லை. இதில், பிரிட்டன் எம்.பி.க்களில் ஒருவரான ஹென்றி ஸ்மின் மட்டும் பயணித்துள்ளார். மேலும், இந்த தொழில்நுட்பம் விமானப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க சாதனை என்றும் வியந்துள்ளார்.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இத்தகைய எரிபொருளை பயன்படுத்தியதன் மூலம் 70% அளவுக்கு கார்பன் உமிழ்வு குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் இந்த சாதனையை பாராட்டியுள்ளார். மேலும், இந்த பசுமை எரிபொருளை பயன்படுத்துவதன் மூலம் விமானக் கட்டணங்களும் பெருமளவு குறையும் என கூறப்படுகிறது.