வயதை நினைத்து கவலையா? உங்களுக்கு ஹாப்பி நியூஸ் - இளமையின் ரகசியத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!
அமெரிக்காவில் இளமையாக இருக்கும் ரகசியத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முதுமை
வயதானவர்கள் தங்களது முதுமையை நினைத்து பல நேரங்களில் வருந்துவர், தங்களின் இளமை காலம் முடிந்துவிட்டதே என்று. சிலர் சிகிச்சை போன்றனவற்றை செய்து தங்களை இளமையாக காட்டிக்கொள்கின்றனர்.
மேலும், சிலர் மேக்கப் போன்ற விஷயங்களை பயன்படுத்தி தங்களை எந்த அளவிற்கு இளமையாக காட்டிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு செய்து முதுமையை மறைக்கின்றனர். இப்பொழுது அந்த வருத்தம் வேண்டாம், அமெரிக்காவின் ஹார்வர்டில் உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய கண்டுபிடிப்பு
இதனை தொடர்ந்து, ஆராய்ச்சியாளர்கள் "கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை" என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது.
இது மனித தோல் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்தாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்து ஆராய்ச்சியாளர் டேவிட் சின்க்ளேர் கூறுகையில், "முதற்கட்டமாக நாங்கள் எலிகளில் இது குறித்த விரிவான சோதனையை நடத்தினோம். அதில் பார்வை நரம்பு, மூளை திசு, சிறுநீரகம் மற்றும் தசைகள் ஆகியவற்றில் இது சிறந்த பலனைத் தருகிறது. வயதான எலிகளின் பார்வை மேம்பட்டுள்ளது.
மேலும், அதன் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதை நாங்கள் குரங்குகளிலும் சோதனை செய்தோம். அதன் பார்வை அதிகரித்துள்ளது. இப்படி இதில் அனைத்துமே பாசிட்டிவாகவே இருக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மனிதர்கள் மீது ஆராய்ச்சி செய்யவேண்டும், எல்லாம் சரியாக நடந்தால் சில ஆண்டுகளில் வயதாவதைத் தடுக்கும் மருந்துகள் நம்மிடம் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.