கர்நாடகா நிலச்சரிவு; உயிருடன் புதைந்த 8 பேர் - சிக்கிய தமிழர்களின் நிலை என்ன?
கர்நாடகா நிலச்சரிவில் மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.
கர்நாடகா
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. ஜூலை 17ம் தேதி உத்தர கன்னடாவின் ஷிரூர் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் கங்கவாலி ஆற்று வெள்ளத்தால் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட 3 டேங்கர் லாரிகள் அடித்துச் செல்லப்பட்டன.
இதில் 11 பேர் சிக்கியுள்ளனர். தற்போது வரை 8 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு நடைபெற்ற இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் சித்தராமையா இதில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மீட்புப்பணி
கடந்த 10 நாட்களாக சிக்கியுள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மீட்புப்பணியில் பேரிடர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்துள்ளனர். இஸ்ரோ உதவியுடன் ரேடார் தொழிநுட்பமும் மீட்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சின்னண்ணன், முருகன் என்ற தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் உடல் மீட்கப்பட்டு அவரது குடுமபத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் 3 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நாமக்கல்லை சேர்ந்த சரவணன் என்ற வாகன ஓட்டுனரும் சிக்கியுள்ளார். தேடுதல் பணியில் தற்போது ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது. அந்த உடல் சரவணனின் உடலா என டி.என்.ஏ சோதனை மூலம் உறுதிப்படுத்த சரவணனின் தாய் தற்போது கர்நாடக விரைந்துள்ளார்.