தோழியை கரம்பிடிக்க ஆணாக மாறிய கல்லூரி மாணவி...!
சேலம் அருகே திருமணமான ஒரே மாதத்தில் தோழியுடன் மாயமான கல்லூரி மாணவி சென்னையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் செளமியா என்பவர் சேலம் தலைவாசல் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இதே ஊரைச் சேர்ந்த செளமியாவின் தோழி பிரித்திகாவும் அதே கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
சிறு வயதிலிருந்தே தோழிகளாக பழகி வந்த இவர்கள் இருவரும் பள்ளியிலும் ஒரே வகுப்பில் படித்து முடித்து, ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். இதனிடையே செளமியாவுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இதனிடையே கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதி ஆன்லைனில் வகுப்பில் தேர்வு எழுதிய பேப்பர்களை கல்லூரிக்கு சென்று கொடுத்து விட்டு வருவதாக இருவரும் புறப்பட்டு சென்றுள்ளனர். ஆனால் அதன் பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரின் பெற்றோரும் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்த தகவலும் தெரியாததால் இதுகுறித்து தலைவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருமணமான நிலையில், தோழிகள் பழையபடி சந்திக்க முடியாத வருத்தத்தில் இருந்துள்ளனர். இவர்களில் திருமணமான தோழி பெண்ணாக வாழ விரும்பாததால், ஆண் தோற்றத்துக்கு மாறியுள்ளார். நெருங்கிய தோழிகளான இருவரும் காதல் ஜோடி போன்று பழகியுள்ளனர். அந்த நேரத்தில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த பெண்கள் ஆண் போல் உடையணிந்து கொண்டு காதல் ஜோடிகள் போல் பாடல்களுக்கு நடித்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளனர்.
அவர்களுடன் செளமியாவுக்கும், பிரித்திகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ள நிலையில், மாயமான தினத்தன்று இருவரும் பஸ்ஸில் சென்னைக்கு சென்று அந்தப் பெண்களுடன் தங்கியிருந்ததும் கையில் எடுத்துச்சென்ற பணம் காலியான நிலையில், அணிந்திருந்த நகையை விற்று ஜாலியாக சுற்றியதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரின் பெற்றோரையும் வரவழைத்த போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.