72வது குடியரசு தினம்: தேசியக்கொடி ஏற்றினார் தமிழக ஆளுநர்
இன்று 72வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வரும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடி ஏற்றினார். தொடர்ந்து பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்று வருகிறார், இதற்கு முன்னதாக ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக வீடுகளில் இருந்தபடியே குடியரசு தின நிகழ்வுகளை மக்கள் கண்டுகளிக்க தமிழக அரசு ஏற்பாடுகள் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடியரசு தின விழாவின்போது, மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீா் விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட உள்ளது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படுகிறது.