மெரினாவில் நினைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!
மெரினாவில் உள்ள தலைவர்களின் நினைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினம்
இந்தியாவின் 74ஆவது குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு, நாளை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் மற்றும் விருதுகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். விழாவை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக குறைந்த அளவு வாகனங்களே பங்கேற்றன.
தடை
இந்த முறை, தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 21 அலங்கார வாகனங்கள் அணிவகுக்கின்றன. கலை நிகழ்ச்சிகளில் ராஜஸ்தானின் குல்பாலியா நடனம், மகாராஷ்டிராவின் கோலி நடனம்,
அசாமின் பாகுரும்பா நடனம், தமிழகத்தின் கரகாட்டம், கைசிலம்பாட்டம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களால் இன்றும் நாளையும் மெரினாவில் உள்ள நினைவிடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.